Wednesday, April 20, 2011

அண்ணா ஹசாரே மற்றும் சத்யாக்கிரகம்



அன்னா ஹசாரேயை ஆதரிப்போம்

நான் ஏற்கனவே சொன்னது போல்   -

நமது  ஒட்டுமொத மனசாட்சியின்  ஒரு வடிவமே  அன்னா ஹசாரே என  நான் நினைகிறேன். இந்த நிலையில் இந்தியாவுக்கு இன்னும் பல அன்னா ஹசாரேக்கள் தேவை.  சமுக, பொருளாதார  நிலையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல அடிப்படை  மாற்றம் தேவையே 

அதிலிருந்து சிறு பகுதி மட்டும் கிழே 


 முன்னர் சொன்னதுபோல மக்கள்போராட்டம் என்பது மக்கள்மனநிலையை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டமே. மக்களிடம் ஓங்கி இருக்கும் ஒரு இயல்பே அந்த மக்களின் அரசாங்கத்திலும் பிரதிபலிக்கிறது. மக்களின் பிரதிநிதித்துவமுகமே அரசு. நம் மக்களிடம் ஓங்கியிருக்கும் ஊழலே அரசின் ஊழல். அதை உருவாக்குவதும் அதன் பலியாடுகளும் அவர்களே. அந்த பெரும்பான்மை கருத்தியலுக்கு எதிராக ஒரு ஆக்கபூர்வ சிறுபான்மையின் குரலே மாற்றத்துக்காக எழுகிறது.

அதாவது சத்தியாக்கிரகம் என்பது பெரும்பான்மைக்கு எதிராக சிறுபான்மையின் போராட்டம். அது பெரும்பான்மையின் மனசாட்சியை தீண்டி எழுப்புவதாக, அவர்களிடம் உண்மையை உடைத்துக்காட்டுவதாக மட்டுமே இருக்க முடியும். சாத்வீகமான கருத்தியல் போராக மட்டுமே நிகழ முடியும். 

‘இதெல்லாம் ஒண்ணும் வேலைக்காவாது, கெளம்பி அடிக்க வேண்டியதுதான்’ என்ற வகை பேச்சுகளை நாம் கேட்கிறோம். யார் யாரை அடிப்பது? இங்கே நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேரும் ஏதோ ஒருவகையில் ஊழலுடன் சம்பந்தப்பட்டவர்கள். மிக அடித்தள மக்களில் கூட அமைப்புசார்ந்த ஊழல் இருப்பதை, பெரும்பாலான பஞ்சாயத்துகள் அதன் அடிப்படையில் நிகழ்வதை நானே நேரில் கண்டிருக்கிறேன். ஊழல் இங்கே ஓர் அன்றாட வாழ்க்கைமுறை. அந்த ஊழலுடன் சம்பந்தமே இல்லாமல் வெளியே நிற்பவர்கள் எத்தனைபேர்? அவர்கள் அடிக்கக்  கிளம்பி என்ன செய்யப்போகிறார்கள்? கைப்பிள்ளை கிளம்பிய கணக்காகத்தான் ஆகும்.


சத்யாக்கிரக போராட்டம் என்பது என்ன?


அரசதிகாரம் என்பது தனிமனிதர்களைச் சாராது ஒட்டுமொத்தமாகச் செயல்படும் ஒரு ஆற்றல். புறவயமான ஒரு பொருண்மைச்சக்தி அது. அதற்கு தனிமனித உணர்ச்சிகள் ஏதும் இல்லை. ஆகவெ தனிமனித உணர்ச்சிகளோ நியாயங்களோ அங்கே செல்லுபடியாவதில்லை. அதை எதிர்ப்பதற்கு அதே போன்ற புறவயமான பொருண்மைச்சக்திதான் தேவை.  தனிப்பட்ட உணர்ச்சிகளை கொண்டுபோய் அரசதிகாரத்தின் முன்னால் வைப்பதென்பது முட்டாள்தனம்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் செய்ததுதான் பிரிட்டிஷ் அரசு. உலகப்போரை நடத்தியது அது. அதன்முன் நூறுபேர் சென்று பட்டினி கிடந்தால் அது ஒன்றும் ஆடிப்போய்விடாது. வேறெவரையும் விட திட்டவட்டமாக அதை அறிந்திருந்தவர் காந்தி. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக காந்தி நிகழ்த்திய போராட்டங்கள் எவையும் அந்த வகையான உணர்ச்சிகர போராட்டங்கள் அல்ல.  பிரிட்டிஷாருக்கு எதிராக காந்தி உண்ணாவிரதம் இருக்கவில்லை, இருக்க ஆணையிடவும் இல்லை என்ற உண்மை நம் முன் இருக்கிறது. அவர் உண்ணாவிரதமிருந்தது தன் தரப்பை தொகுத்துக்கொள்ளவும் அதில் இருந்த முரண்பாடுகளை களையவும் தன் பக்கத்து ஆற்றலை திரட்டிக்கொள்ளவும்தான்.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக காந்தி  முன்வைத்த எல்லா போராட்டங்களும் பொருளியல் உள்ளடக்கம் கொண்டவை. பொருளியல் ஆதிக்கம் மூலமே பிரிட்டிஷ் அரசு இங்கே நீடிக்கிறது என அவர் அறிந்திருந்தார். இந்திய மக்களின் பெரும்பான்மை அந்த பொருளியல் சுரண்டலுக்கு அளிக்கும் ஆதரவே அவர்களை நிலைநிறுத்தியிருக்கிறது என அவர் உணர்ந்தார். அந்த மக்களாதரவை படிப்படியாக இல்லாமலாக்குவதற்காகவே அவர் அந்தப் போராட்டங்களை நடத்தினார்

அன்னியப்பொருள் புறக்கணிப்பு, உப்பு காய்ச்சுதல், வரிகொடாமை, ஒத்துழையாமை ஆகியவை இந்திய மக்கள் பிரிட்டிஷ் அரசுக்கு அளித்துவந்த பொருளியல் ஆதரவை இல்லாமலாக்குபவை. அவற்றை பிரிட்டிஷ் அரசு எதிர்கொண்ட முறை மூலம் அவ்வரசின் பொருளியல் உள்நோக்கம் மேலும் மேலும் அம்பலப்பட்டு அது இந்திய குடிமைச்சமூகத்தின் [சிவில் சொசைட்டி] ஆதரவை இழந்தது. அவ்வாறுதான் அது இங்கே நீடிக்கமுடியாத நிலை உருவானது.

அரசின் அதிகாரம் என்பது மக்களின் கூட்டான அங்கீகாரம் மூலம் வருவது. அண்டோனியோ கிராம்ஷியை மேற்கோளாக்கிச் சொல்லப்போனால் அதிகாரம் குடிமைச்சமூகத்தில் கருத்தியல் வடிவில் உறைகிறது. ஆகவே அரசின்அதிகாரத்துக்கு எதிரான போராட்டம் என்பது அந்தச் சமூகத்தின் பொதுக்கருத்தியலுக்கு எதிரான போராட்டமே ஆகும். காந்தி போராடியது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுத்திருந்த இந்திய குடிமைச்சமூகத்தின் கருத்தியலுக்கு எதிராகத்தான் . சத்தியாக்கிரக போராட்டம் அதற்கான கருவிதான்.


No comments:

Post a Comment