Sunday, April 10, 2011

அன்னா ஹசாரேயை ஆதரிப்போம்

நமது  ஒட்டுமொத மனசாட்சியின்  ஒரு வடிவமே  அன்னா ஹசாரே என  நான் நினைகிறேன். இந்த நிலையில் இந்தியாவுக்கு இன்னும் பல அன்னா ஹசாரேக்கள் தேவை.  சமுக, பொருளாதார  நிலையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல அடிப்படை  மாற்றம் தேவையே


இன்னும் விமரசிப்பவர்கள் / ஆர்வமுள்ளவர்கள் கிழ்க்கண்ட சுட்டிகளை பார்க்கவும்
http://www.sramakrishnan.com/?p=2239


http://www.tamilhindu.com/2011/04/anna-hazare-campaign-some-views-some-questions/ 

அன்னா ஹசாரேயை ஆதரிப்போம்

ஊழலுக்கு எதிராக டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள காந்தியவாதி அன்னா ஹசாரேயை ஆதரிப்போம், இந்தியாவின் ஆன்மா இன்னமும் விழித்துக் கொண்டிருக்கிறது என்பதன் உதாரணம் அன்னா ஹசாரே, அவரது செயல்பாடுகள் காந்திய வழி வந்தவை, அவரது போராட்டத்திற்கு அனைவரும் துணைநிற்போம். ஆதரவுக்குரல் கொடுப்போம்
இன்று அன்னா ஹசாரேயை ஆதரித்து கரூரில் நடைபெற்ற உள்ள அடையாள உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,
அன்னா ஹசாரே பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இளங்கோ ராமசாமி அனுப்பியுள்ள மின்னஞ்சலை இணைத்திருக்கிறேன்
••
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு பணியில் சிவில் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரபல சமூக சேவகர் அண்ணா ஹசாரே டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
ஊழல் தடுப்பு மசோதா வரைவு பணியில் முற்றிலும் அரசு அதிகாரிகள் மட்டும் இடம் பெறாமல், சாமான்ய மக்கள் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் 50 விழுக்காடு இடம் அளிக்க வேண்டும் என்று ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் இருந்ததை தொடர்ந்து, தமது கோரிக்கையை வலியுறுத்தி ஹசாரே இன்று டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
யார் இந்த அண்ணா ஹஸாரே!!
உலகில் மிக அதிகமாக செயற்கைநீர்நிலைகள் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. அத்தனைநீர்நிலைகளையும் உருவாக்கியது நம்மிடமிருந்த கிராமசுயராஜ்ய அமைப்பே. அந்த அமைப்பு அழிந்தபின் அவற்றை பராமரிக்கவே முடியாமல் நம் நாடு திணறுகிறது. ஏனென்றால் சுதந்திரத்தை ஒட்டி கிராமநிர்வாக அமைப்பின் பொருளியல் அதிகாரம் பறிக்கப்பட்டு அது செயலிழக்கவைக்கப்பட்டது. இன்றைய கிராமநிர்வாகம் என்பது அரசு இயந்திரத்தின் கீழ்நிலை அலகாக உள்ளது. ஒரு அடிமட்ட அரசதிகாரியின் அலுவலகமே இன்றைய கிராமநிர்வாக மையமாகும். அதில் பொதுமக்கள் பங்கேற்பே இல்லை. அவர் அந்த மக்களிடம் லஞ்சம் வாங்கும், அவர்களை அடக்கியாளும் ஓர் அதிகாரிதான்.
ஆகவே ஊர்கூடி ஒன்றைச்செய்வதற்கே நம் மக்களுக்கு பழக்கமில்லை.  அதற்கான மனநிலைகளும் தார்மீகக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அழிந்துவிட்ட. ஆனால் எங்கெல்லாம் ஒரு தார்மீக சக்தி உள்ளே புகுந்து அந்த அமைப்பை வெற்றிகரமாக மீண்டும் உருவாக்குகிறதோ அங்கெல்லாம் மகத்தான வெற்றிக்கதைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமகால இந்தியாவிலேயே சிறந்த உதாரணங்கள் பல உள்ளன. பாபுராம் ஹஸாரே [அண்ணா] மகாராஷ்டிரத்தில்  ராலேகான் சித்தி என்ற ஊரில் செய்த புரட்சியைக் குறிப்பிடலாம்
ராலேக்ஜான் சித்தி ஊருக்கு வரும்போது அந்த ஊரின் சமூகமையமாக இருந்த ஆலயத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுகொண்டிருந்தது.  ஊர் எப்படி இருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. பொருளியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அந்தக் கிராமம் பெரும் சரிவில் இருந்தது
மெல்ல மெல்ல அந்தக்கிராமத்தை மீட்டெடுத்தார். முதலில் ஊருக்கு ஒரு சுயநிர்வாக அமைப்பை அவர் உருவாக்கினார். அதை அரசாங்கத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றாக கட்டமைத்தார். அதைக்கொண்டு கிராமத்திற்குத் தேவையான விஷயங்களை அந்த மக்களே செய்துகொள்ள வழியமைத்தார்.
அண்ணா ஹஸாரே ராலேகான் சித்தியில் செய்த நீர் நிர்வாகம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டிருக்கிறது. அவர் புதிய தொழில்நுட்பம் எதையும் கொண்டு வரவில்லை. அந்த நிலப்பகுதிகளில் பலகாலமாக இருந்துவந்த முறைதான் அது. நூறுவருடம் முன்பு வெள்ளைய ஆட்சி பாசனத்தையும் பொதுநிலத்தையும் கையிலெடுத்தபோது அந்தமுறை கைவிடப்பட்டு இந்தியாவெங்கும்  அவர்கள் அமலாக்கிய ஒரேவகையான நீர்நிர்வாக முறை கொண்டுவரப்பட்டது. அது அந்தக்கிராமத்தை அரைப்பாலைநிலமாக ஆக்கியது.
தேவையான அளவுக்கு மழைபெய்யக்கூடிய நிலம் அது. ஆனால் மழை ஒரேசமயம் கொட்டித்தீர்த்துவிடும். அந்த நீரைச் சேர்த்து வைக்க ஆழமில்லாத நூற்றுக்கணக்கான குட்டைகளை உருவாக்கி வைப்பது பழங்கால முறை. தமிழ்நாட்டில் திருப்பத்தூர் தருமபுரி வேலூர் செங்கற்பட்டு பகுதிகளில் இருந்து இன்று அழிக்கப்பட்டுவிட்ட அதே முறை. வெள்ளையர் ஆட்சியில் இந்தக்குட்டைகள் பராமரிப்பில்லாமல் விடப்பட்டன. அண்ணா ஹஸாரே அக்குட்டைகளை மீட்டெடுத்தார். புதிதாக நிறைய குட்டைகளை உருவாக்கினார். சில வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. திட்டமிட்டு அளவோடு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேளாண்மைசெய்ய ஆரம்பித்தார்கள். கிராமத்தின் பசுமை மீண்டு வந்தது
விவசாயத்துடன் இணைத்தே பசு வளார்ப்பு கோழி வளர்ப்பு போன்றவற்றை செய்தார் அண்ணா ஹஸாரே. மெல்ல மெல்ல அக்கிராமம் அதன் முக அடையாளமாக விளங்கிய வறுமையில் இருந்து மேலே வந்தது. அங்கே நிலவிய கடுமையான குடிப்பழக்கத்தையும் தீண்டாமையையும் ஊர்ப்பஞ்சாயத்துக்கள் மூலம் இல்லாமலாக்கினார். ராலேகான் சித்தி ஒரு கிராமத்தில் என்ன சாத்தியம் என்பதற்கான உதாரணமாக இன்று சுட்டிக்காட்டப்படுகிறது. 1997ல் நான் ராலேகான் சித்திக்குச் சென்று அந்த ஊர் வரண்ட சூழலில் ஒரு பசுமைத்தீவாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
அண்ணா ஹசாரே செய்தது மிக எளிமையான விஷயம்தான். ஒரு கிராமத்தின் பிரச்சினைகள் அந்தக்கிராமத்திற்கே உரியவை. அவற்றுக்கான தீர்வுகளையும் அந்தக் கிராம இயல்பிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். அந்தந்தக் கிராமங்களில் அதற்கான முடிவெடுக்கும் அமைப்பும் செயல்படுத்தும் வசதியும் இருந்தால் மட்டுமே அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவர் கிராமப் பஞ்சாயத்தை உயிர்ப்பிப்பதன் மூலம் அதைச் செய்தார். அதன்மூலம் அந்தமக்கள் மறந்துவிட்டிருந்த ஒரு முறையை திருப்பிக்கொண்டுவந்தார்.
ஆனால் அங்கே இருந்த கிராமப் பஞ்சாயத்தை முழுக்கவே அழித்துவிட்டு அங்கே அரசாங்கத்தின் ஓர் அலகை நிறுவிய நம் இந்திய மைய அரசு அக்கிராமத்தின் எல்லா தனிச்செயல்பாடுகளையும் தடைசெய்கிறது என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். அந்த அதிகார அமைப்பின் ஊழல், பொறுப்பின்மை, தாமதம் அனைத்துடனும் போராடியே அண்ணா ஹஸாரே தன் சாதனையைச் செய்யவேண்டியிருந்தது. ராலேகான் சித்தி தன் தேவைகள் அனைத்தையும் செய்துகொள்வதற்கான முழுச்செலவையும் வரியாக ஏற்கனவே அரசுக்குக் கொடுத்திவிட்டு மேலதிக நிதியாதாரத்தை உருவாக்கி தன் தேவைகளைச் செய்யவேண்டியிருந்தது!
மன்மோஹன் சிங் தாமதம் செய்வதால், உண்ணாவிரதத்தை ஆரம்பித்த அண்ணா ஹஸாரே: லோக்பால் அமைக்கக்கோரி, பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 05-04-2011 அன்று துவக்கினார்.   உயர்மட்டத்தில் உள்ளவர்களை விசாரிக்க வழி செய்யும், “ஜன லோக்பால்’ அமைக்கக்கோரி, சமூக சேவகர் அன்னா ஹசாரே, மத்திய அரசை வற்புறுத்தி வந்தார். இது குறித்து உண்ணாவிரதம் இருக்க போவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து, ஹசாரேவை அழைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். பிரதமர் உட்பட பெரிய பதவிகளில் இருப்பவர்களின் ஊழலை விசாரிக்க வழி செய்வது லோக்பால் அமைப்பு. மக்களுக்கு இந்த அதிகாரம் கிடைப்பதை ஜனலோக்பால் என்று ஹசாரே அழைக்கிறார். பிரதமர் இதுநாள் வரை லோக்பால் அமைக்க நடவடிக்கை எடுக்காததால், அன்னா ஹசாரே நேற்று தன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.
சமூகசேவகருக்கு பலர் ஆதரவு: இந்நிலையில் பலரும் இவருக்கு ஆதரவாக போராட கிளம்பியிருக்கின்றனர். இவருக்கு ஆதரவாக சுவாமி அக்னிவேஷ், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி, மகசசே விருது பெற்ற சந்தீப் பாண்டே ஆகியோரும், உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, காந்தி சமாதிக்கு சென்ற அன்னா ஹசாரே, அங்கு மலரஞ்சலி செலுத்திய பின், “இந்தியா கேட்’ பகுதிக்கு ஜீப்பில் சென்றார். அங்கு ஏராளமானவர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். அதன் பின் அவர் ஜந்தர் மந்தர் பகுதியில் தன் உண்ணாவிரதத்தை துவக்கினார். அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிக்கும் விதமாக, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.
லோக்பால் அமைப்பு என்று போராடும் அண்ணா ஹஸாரே: இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தை ஹஸாரே தொடங்கியிருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக ஹஸாரே அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக பிரதமர் அலுவலகதிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஸாரே மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் பிரதமருக்கு உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக ஹசாரே குறிப்பிடுகையில், “என் மீது அதிக நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார்.
பின்னர் ஏன் லோக்பால் அமைப்பை உருவாக்க தயங்குகிறார்? ஜன லோக்பால் அமைக்கும் வரை என் போராட்டம் தொடரும்’ என்றார். உண்ணாவிரத போராட்ட துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத்யாதவ் குறிப்பிடுகையில், “சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் போன்றவற்றுக்கு தன்னிச்சையான அதிகாரம் உள்ளது போல், ஊழலை ஒழிக்க சக்தி வாய்ந்த லோக்பால் அமைப்பு இந்த தருணத்தில் தேவை’ என்றார்.
அன்னா ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் ஏமாற்றம் அளிப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 72 வயதான ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை ஆதரிப்பதாக பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். மேலும், ஹசாரே கோரிக்கைக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் ஹசாரே உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து, தெருக்களில் நோட்டீஸ் வினியோகித்தனர்.
ஜன் லோக்பால் என்றால் என்ன:
ஜன் லோக்பால் என்ற இந்த மசோதாவின் சூத்ரதாரி கர்நாடகத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுவரும் லோகாயுக்தா அமைப்பின் நிறுவனரும், முன்னாள் உச்சநீதிமன்ற  நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ப்ரசாந்த் பூஷன்  போன்றோர் ஆவர். இம்மசோதாவின் நோக்கம், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் ஊழல்  புகார்களை உடனுக்குடன் (ஒரு வருடத்தில்) விசாரித்து முடித்து, சம்பத்தப்பட்ட நபருக்கு தண்டனை வாங்கித் தருவது, ஊழலின் மூலம் ஈட்டிய சொத்துக்களை முடக்குவது, போன்றவை ஆகும்.
தவிர, ஊழலில் ஈடுபட்டவர் மந்திரியாகவோ அல்லது முக்கிய அரசாங்க  அதிகாரியாகவோ இருப்பின், அவர் மீது வழக்குத் தொடர அரசாங்க அனுமதி தேவையில்லை  என்பதுவும் இம்மசோதாவின் முக்கிய அம்சமாகும். இம்மசோதாவை பாராளுமன்றத்தில்  ஏற்று நிறைவேற்ற வேண்டுமென்பதுதான் இப்போதைய அன்னா ஹஸாரே தலைமையிலான உண்ணா  நோன்பிருப்பவர்களின் முக்கியக் கோரிக்கை.
ஊழலுக்கெதிராகப் பிறப்பெடுத்துள்ள தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம்
ஏற்கனவே ஊழலை ஒழிக்க லோக்பால் என்ற மசோதாவை பாராளுமன்றத்தில் கொணர்ந்து
நிறைவேற்றியும் உள்ளது. ஆனால் அதிலுள்ள ஓட்டைகளின் காரணமாக அது செயல்படுத்த
முடியாத ஒரு சட்டம் என்பது அதை எதிர்க்கும் ஹஸாரே போன்றோர் கூறும் காரணம்.
அரசாங்கத்தில் லோக்பால் மசோதா மூலம் ஒரு மந்திரியோ அல்லது அரசாங்க அதிகாரி
தொடர்புடைய ஊழலையோ வெளிக் கொணர்ந்து, விசாரித்து தண்டனை பெற்றுத் தர
வேண்டுமானால், பொதுமக்கள் முதலில் லோக்சபா அல்லது ராஜ்யசபாவின் சபாநாயகரிடம்
ஊழல் தொடர்பான புகார் மனுவை அளிக்க வேண்டும். சபாநாயகர் அம்மனுவைப்
பரிசீலித்து, அது ஏற்புடையது என்றால் லோக்பால் கமிட்டிக்கு அனுப்புவார். பின்பு
அது விசாரிக்கப்பட்டு, தண்டனையளிக்கப்படும்.
இயல்பாகவே சபாநாயகர் ஆளுங்கட்சியையோ அல்லது கூட்டணியையோ சார்ந்த நபராக இருப்பதால், ஆளுங்கட்சி அல்லது அதற்கு வேண்டிய அதிகாரி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு சபாநாயகர்  எடுத்துக் கொள்வது சந்தேகமே. அதற்கு மீறி கமிட்டிக்கு அனுப்பப்பட்டாலும் விசாரணை ஆண்டுகள் கணக்கில் எடுத்து, மறக்கப்பட்டு, பொதுமக்களின் பணமும் விசாரணை  என்ற பெயரால் வீணடிக்கப்படும். எனவே அந்த லோக்பால் சட்டம் ஏற்புடையதல்ல என்பதே ஹஸாரே மற்றும் குழுவினரின் வாதம்.
ஜன் லோக்பால் மசோதாவின் அம்சங்கள்:
* மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், ஒவ்வொரு மாநிலத்திலும் லோகாயுக்தா
அமைப்பும் நிறுவப்படும்.
* உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவ்வமைப்பும் சுதந்திரமான
அமைப்பாகும். இதன் விசாரணையில் அரசாங்கமோ அல்லது அதிகாரிகளின் குறுக்கீடோ
இருக்காது.
* மற்ற வழக்குகள் போல் பல மாமாங்கங்களாக விசாரணை நடைபெறாமல், ஜன் லோக்பால்
அமைப்பின் மூலம் எந்தவொரு வழக்கு விசாரணையும் ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டு,
அடுத்த ஓராண்டில் வழக்கும் முடிக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய
நபருக்கு தண்டனையும் அளிக்கப்பட்டு விடும்.
* ஊழல் மூலம் ஈட்டப்பட்ட, அரசாங்கத்திற்கு நட்டமேற்படுத்தப்பட்ட தொகை
தண்டனைக்காலத்தில் மீட்கப்படும்.
* பொது மக்களுக்கு எந்தவொரு அரசாங்க அலுவலகத்தில் குறிப்பிட்ட பணி முடித்துக்
கொடுக்கப்படா விட்டாலோ அல்லது தாமதப்படுத்தப்பட்டாலோ, தொடர்புடைய அதிகாரிக்கு
அபராதம் விதிக்கப்பட்டு, அவ்வபராதம் மனுதாரருக்கு நிவாரணமாக அளிக்கப்படும்.
* ஆக உங்களுடைய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை
பெறுவதில் மெத்தனமோ, தாமதமோ ஏற்படுத்தப்பட்டாலோ, நீங்கள் இவ்வமைப்பை அணுகலாம்.
இதன் மூலம் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு அது கிடைப்பதோடு மட்டுமல்லாமல்,
நிவாரணமும் பெற்றுத் தரப்படும். தவிர தரமற்ற சாலைகள், பஞ்சாயத்து அளவில்
நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றையும் நீங்கள் இவ்வமைப்பின்
கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம். இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய குற்றவாளி
தண்டனை பெறுவார்.
* லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் அரசாங்கம் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள்.
நீதிபதிகள், பொதுமக்கள் போன்றவர்கள் மூலம் மிகவும் வெளிப்படையான நியமனம்
இருக்கும். ஆகவே ஊழல் பேர்வழிகளே ஊழலை ஒழிக்கப் புறப்படும் அவலங்கள்
தவிர்க்கப்படும்.
* ஜன் லோக்பால் உறுப்பினர்களே ஊழல்வாதிகளாக இருப்பின், அவர்கள் மீதான புகார்கள்
உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு,
தண்டனை பெற்றுத் தரப்படுவர்.
* புகார் அளிப்பவர்கள் மற்றும் புகாரில் தொடர்புடையவர்களுக்கு முழு பாதுகாப்பு
அளிக்கப்படும்.
மேற்கண்ட எந்தவொரு அம்சமும் அரசாங்கத்தின் தற்போதைய லோக்பால் மசோதாவில் இல்லை.
இது போன்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கொண்ட நோக்கில் பழுதின்றி
செயல்பட்டால், நிச்சயம் இந்தியா ஊழலற்ற தேசமாக மாறும் என்பதில் சிறிதளவும்
ஐயமில்லை. தவிர, லோகாயுக்தா அமைப்பு கர்நாடக அமைச்சர்கள் கண்களில் விரலை விட்டு
ஆட்டுவதால், இவ்வமைப்பு நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்து என்பதிலும்
ஐயமில்லை. ஆக இந்தியர்கள் உலகக் கோப்பை வெற்றியை ஒற்றுமையோடு வரவேற்றுக்
கொண்டாடியதைப் போல், ஹஸாரேவின் உண்ணா நோன்பிற்கும் ஆதரவளித்து, அவரது உயர்ந்த நோக்கம் ஈடேற ஆதரவளிப்போம்.
லோக்பால் பற்றி யாரும் அவ்வளவாக பேசுவதில்லை. பேசாமல் லோக்பால் என்பதை
கிரிக்கெட் பால் என்று வைத்தால் பலரும் பேசுவார்கள் என்று நம்புகிறேன். அண்ணா
ஹஸாரே முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். வெற்று பெற்றால் இவர் தான் பாரத ரத்னா!

No comments:

Post a Comment