கவனித்தல் என்கிற ஒன்று இல்லாமல் எந்த மனிதனும் இருக்க முடியாது.ஆனால் எதை கவனிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது, வித்தியாசம்.இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நம்மை சுற்றியுள்ள எல்லாவற்றையும் கவனிக்கிறோம்.அடிப்படையில் கவனித்தல் என்பது புறத்தில் ஐம்புலன்கள் மூலமே சாத்தியமாகிறது.
நம்முடைய கவனத்தில் கடந்து போகும் ஒவ்வொரு நிகழ்வும் மனதில் பதிந்து உணர்வுகளை தூண்டுகிறது. இந்த உணர்வுகளின் கொந்தளிப்பில்தால் நாம் செயலாற்றுகிறோம்.ஒரு கட்டத்தில் இந்த உணர்வுகளுக்கு அடிமையாகி அதன் ஏவலில் அடிமைகளாய் செயல்படுகிறோம் என்பதுதான் உண்மை.
இந்த உணர்வுகள் எதுவும் நமக்குள் உருவாவதில்லை.அது கோபமாய் இருக்கட்டும், மகிழ்ச்சியாய் இருக்கட்டும் அவை புறத்தே இருந்து நமக்குள்ளே வந்து தங்கி நம்மை ஆட்டுவிக்கிறது. கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், இந்த உணர்வுகள் எதுவும் நிரந்தரமானவை அல்ல, துக்கமோ,மகிழ்ச்சியோ எல்லா நேரமும் நம்மில் இருப்பதில்லை....நம்முடையதைப் போல நமக்குள் நுழையும் இந்த உணர்வுகள், பெரும்பாலும் வருத்தங்களையும், துக்கங்களையும், அழுத்தங்களையும், கவலைகளையுமே கொண்டு தருகிறது.
ஒரு கணம் இந்த உணர்வுகள் என்னுடையதில்லை, எனக்கானதும் இல்லை என தீர்மானித்து அவற்றை உங்களுக்குள் நுழைய விடக்க்கூடாது என தீவிரமாய் கவனிக்க ஆரம்பியுங்கள்...அற்புதங்கள் அங்கேதான் ஆரம்பமாகும்.சித்தர்களும் இதைத்தான் முன்வைக்கிறார்கள்.புறத்தை கவனிப்பதை விட்டு அகத்தை கவனிக்கச் சொல்கிறார்கள்.
தன்னை அறிந்திட தன்னை, தனக்குள் கவனித்தல் அவசியமாகிறது.கவனிக்க ஆரம்பியுங்கள்...கவனம் குவிய குவிய நமக்குள் அலைகிற எல்லாம் கட்டுக்குள் வரும்.அற்புதங்கள் ஆரம்பமாகும்.
No comments:
Post a Comment